31: 1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
31: 2 என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
31: 3 ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
31: 4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
31: 5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
31: 6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
31: 7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
31: 8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
31: 9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
31: 10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
31: 11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
31: 12 அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
31: 13 ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
31: 14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
31: 15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
31: 16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
31: 17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
31: 18 தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
31: 19 தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
31: 20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
31: 21 தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
31: 22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
31: 23 அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
31: 24 மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
31: 25 அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
31: 26 தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
31: 27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
31: 28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
31: 29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
31: 30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
31: 31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.