23: 2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
23: 3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.
23: 4 ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
23: 5 இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.
23: 6 வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
23: 7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
23: 8 நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
23: 9 மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்.
23: 10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
23: 11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
23: 12 உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
23: 13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
23: 14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
23: 15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
23: 16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
23: 17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
23: 18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
23: 19 என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
23: 20 மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
23: 21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
23: 22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
23: 23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
23: 24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
23: 25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
23: 26 என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
23: 27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
23: 28 அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
23: 29 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
23: 30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
23: 31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
23: 32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
23: 33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
23: 34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
23: 35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.



