22: 2 திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தபழி சுமராது.
22: 3 சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
22: 4 அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
22: 5 ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
22: 6 அக்கினி எழும்பி, முள்ளுக்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
22: 7 ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.
22: 8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
22: 9 காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.
22: 10 ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
22: 11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
22: 12 அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம்பண்ணக்கடவன்.
22: 13 அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை.
22: 14 ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
22: 15 அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.
22: 16 நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
22: 17 அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
22: 18 சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
22: 19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
22: 20 கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
22: 21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
22: 22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
22: 23 அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
22: 24 கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
22: 25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
22: 26 பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
22: 27 அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
22: 28 நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
22: 29 முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.
22: 30 உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
22: 31 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.



