148: 1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
148: 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
148: 3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
148: 4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
148: 5 அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
148: 6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
148: 7 பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,
148: 8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
148: 9 மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
148: 10 காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
148: 11 பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
148: 12 வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
148: 13 அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
148: 14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.